சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீடுகளின்படி, உலகில் ஒவ்வொரு ஏழு நபர்களில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையான மனநல பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேசிய மனநல மருத்துவமனையின் பணிப்பாளர், விசேட மருத்துவ நிபுணர் தம்மிக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்றுவியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இலங்கையின் மனநல சிகிச்சை மற்றும் அதன் போக்கு குறித்து அவர் மேலும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தேசிய மனநல மருத்தவமனையில் மட்டும் வருடத்திற்கு 50,000 க்கும் அதிகமான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளொன்றுக்குச் சுமார் 600 நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

பணிப்புறக்கணிப்புகள் அல்லது போராட்டங்கள் எதுவாக இருந்தாலும், தேசிய மனநல மருத்துவமனையின் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மனநல ஆலோசனை தேவைப்படும் எவரும் எந்த நேரத்திலும் தேசிய மனநல மருத்துவமனைக்கு நேரில் வரலாம் அல்லது 1926 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை அழைத்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் தெரிவித்தார்.

இன்றைய இளைஞர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசத் தயங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், புதிய அணுகுமுறை குறித்து விளக்கினார்.

பல இளைஞர்கள் தங்களது பிரச்சினைகளை மற்றவர்கள் கேட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் பேசத் தயங்குகிறார்கள்.

இதற்காக நாங்கள் வட்ஸ்அப் மூலமாக ஆலோசனைகளை வழங்குகிறோம். அவர்கள் தமது பிரச்சினைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பி தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.