ஐரோப்பிய ஒன்றியத்துடன் மல்லுக்கட்டும் டிக்-டொக்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை மீறியதற்காக, டிக்-டொக் (TikTok) செயலி தனது வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அல்லது பாரிய அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளப் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில், டிக்-டொக் நிறுவனம் தனது வடிவமைப்பில் அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தவறும்பட்சத்தில், அந்நிறுவனத்தின் உலகளாவிய வருமானத்தில் 6 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்குச் சொந்தமான இந்தச் செயலி குறித்து 2024 பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் ஆரம்பகட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில், டிக்-டொக் செயலியின் சில அம்சங்கள் பயனர்களின், குறிப்பாகச் சிறுவர்களின் மனநலனைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய குறைபாடுகள்

தானாக இயங்கும் காணொளிகள் : இந்த வசதி பயனர்களின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்பதை டிக்-டொக் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது.

முடிவில்லாத் தேடல்: பயனர்கள் இடைவிடாது காணொளிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வடிவமைப்பை செயலிழக்கச் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அல்காரிதம் மாற்றங்கள்: பயனர்களின் விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து காணொளிகளைத் தரும் அல்காரிதங்களில் மாற்றங்களைச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இரவு நேர இடைவேளை: இரவு நேரங்களில் செயலியைப் பயன்படுத்துவோருக்கு ‘திரை நேர இடைவேளைகளை’ அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிக்-டொக் நிறுவனத்தின் பதில்

இந்தக் குற்றச்சாட்டுகளை டிக்-டொக் நிறுவனம் முற்றாக மறுத்துள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் கருத்துகள் தவறானவை என்றும், ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர், இதனை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.