அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் டிப்பர் ரக வாகனம் விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், ஒலுவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது வாகனத்தில் இருந்த ஏராளமான நெல் மூட்டைகள் வீதியோரத்தில் சிதறின.

எனினும், வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால், சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.