4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது!

சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை, பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக, கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேருந்தில், இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு–கல்முனை அதி சொகுசு பேருந்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த, 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான குடும்பஸ்தர், பயணப்பை ஒன்றில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வந்திருந்த, 4 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் கைதானார்.

குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த போதைப்பொருட்களில், குஷ், கேரளா கஞ்சா, ஐஸ், ஹெரோயின், உட்பட 4 வகையான போதைப்பொருட்கள், பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

ஆமலும் இந்த சோதனை நடடிவடிக்கையில், மொத்தமாக ஆறு சந்நேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை, கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த, பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.