2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை, சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், கொழும்பில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு பயணித்த, அதி சொகுசு பேருந்தில் பயணித்த 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கைபோது, பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரும் அவரது மருமகனும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமிருந்து குஷ், கேரளா கஞ்சா, ஐஸ், ஹெரோயின், உட்பட பல வகையான போதைப் பொருட்கள், தொலைபேசிகள், ஒரு தொகை பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
47 வயது மற்றும் 68 வயது மதிக்கத்தக்க இவ்விரு சந்தேக நபர்களும், சம்மாந்துறை பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளமை விசாரணைணயில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
