மூதூர் தளவைத்தியசாலையின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு திறந்து வைப்பு!

-மூதூர் நிருபர்-

மூதூர் தள வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு (OPD), கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் நிதியைக் கொண்டு இந்தப் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மூதூர் தள வைத்தியசாலையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை

இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

வைத்தியசாலை நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நோயாளர்களின் நலன் கருதி இந்த விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவீன வசதிகளுடன் இப்பிரிவு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள புதிய வெளிநோயாளர் பிரிவில், சிதறி இருந்த அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் ஒரே கட்டிடத் தொகுதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன் மூலம் நோயாளர்கள் ஒரே இடத்தில் தமக்கான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.

மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம். எம். எம். அரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என். எம். ஹஸ்ஸாலி மூதூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம். கே. எம். சப்ரான் உத்தியோகத்தர்கள், தாதிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.