நீண்ட நாட்களுக்கு பின் திருகோணமலை-கொழும்பு இரவு நேர புகையிரத சேவை ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்-

மிக நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த, கொழும்பு – திருகோணமலைக்கான இரவு நேர புகையிரத சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரதம் புறப்பட்டது.

கடந்த ஓரிரு மாத காலமாக தடைப்பட்ட இரவு நேர புகையிரத சேவையானது, தற்போது ஆரம்பமானதால் போக்குவரத்து சேவை பொது மக்களுக்காக இலகுபடுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து பெரும்பாலான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், இரவுநேர புகையிரத சேவையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பல புகையிரத கடவைகளில், மின் விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளருக்கு பல முறை அறிவித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இரவு நேர புகையிரத சேவை மிக நீண்ட நாட்களின் பின் ஆரம்பமானதை போன்று, இரவு நேரங்களில் புகையிரத கடவைக்கான மின் விளக்குகளையும் தாமதமின்றி பொருத்துமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.