
பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி நீக்கப்படமாட்டார் – அரசாங்கம் திட்டவட்டம்
கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வரும் சத்யாகிரகப் போராட்டம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்தோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலிருந்தோ நீக்கப் போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனவே, விமல் வீரவன்ச தனது சத்யாகிரகத்தைத் தொடர வேண்டியிருக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் ஊடாக இந்த சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், இது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கொள்கையாகும்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரசாரத்தின் போது கல்வி சீர்திருத்தங்கள் பற்றித் தெளிவாகக் கூறியிருந்ததாகவும், அதற்கு மக்கள் இரண்டு தேர்தல்களில் ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வித்துறையில் அவசியமான மாற்றங்களை அரசாங்கம் மிகவும் நிதானமாகவும், துணிச்சலாகவும் நடைமுறைப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவும், தங்களுக்கு எதிராக வரக்கூடிய சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகவுமே எதிர்க்கட்சிகள் இவ்வாறான சர்ச்சைகளை உருவாக்குவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
