
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், பொலித்தீன் மற்றும் லஞ்சீற் பாவனையில் இருப்பது அவதானிக்கப்படும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா எச்சரித்துள்ளார்.
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரது இணைந்த ஊடக சந்திப்பு நேற்று திங்கட்கிழமை பிரதேச சபையில் நடைபெற்றது.
இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலித்தீன் பாவனை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர், பொலித்தீன் பாவனை மூலம் எமது சுற்றுச்சூழல் மாசடைகிறது.
பொலித்தீன் பைகள் பாவனைக்கு பதிலாக, துணியினாலான பைகளை பயன்படுத்துவதன் மூலம் அதனை கட்டுப்படுத்த முடியும், உணவகங்களில் லஞ்சீற்றினை தவிர்த்து, வாழையிலை, சுடுநீரில் சுத்தம் செய்த பீங்கான்கள் போன்றவற்றை பயன்படுத்தி உணவுகளை பரிமாற முடியும்.
மேலும், ஊர்காவற்துறை பகுதியில் வசித்தவர்கள் தற்போது ஊர்காவற்துறையை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்றீர்கள், அதனால் இங்கே உள்ள உங்களது காணிகள், வீடுகள் பராமரிப்பற்ற நிலையில் பற்றைக்காடாக இருக்கிறது.
இதனால் அங்கே சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதுடன், சுகாதார சீர்கேடாகவும் உள்ளது.
இவ்வாறான உங்களது காணிகளுக்கு அருகே வசிக்கின்ற மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர், எனவே அவற்றினை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள்.
அவ்வாறு சுத்தம் செய்வத தவறும் பட்சத்தில், நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராகி வருகின்றோம், என்றார்.
