கந்தளாய்-93ஆம் கட்டைப் பகுதியில் விளைநிலங்களை சூறையாடிய காட்டு யானைகள்!

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட 93-ஆம் கட்டைப் பகுதியில், இன்று சனிக்கிழமை அதிகாலை மீண்டும் புகுந்த காட்டு யானைகள் விளைநிலங்களைச் சூறையாடியுள்ளன.

இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

இன்று அதிகாலை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், பல வருடங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த, காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளன.

பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஆசை ஆசையாக நட்டு வளர்த்த மரங்கள் இன்று கண்முன்னே மண்ணோடு மண்ணாகிவிட்டன, என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்னை மரங்கள் மட்டுமன்றி, வயல் நிலங்களையும் யானைகள் மிதித்துச் சேதப்படுத்தியுள்ளன. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லவோ, வீட்டை விட்டு வெளியே வரவோ முடியாத ஒரு அபாயகரமான சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தப் பயனும் இல்லை. எங்களது வேதனையை யாரும் காதுகொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லை. அதிகாரிகளிடம் நாங்கள் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறோம், தயவு செய்து விவசாயிகளாகிய எங்களையும் எங்கள் வாழ்வாதாரத்தையும் காட்டு யானைகளிடமிருந்து காப்பாற்றுங்கள், என ஆவேசத்துடனும் கவலையுடனும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இக்காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.