நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமாரவுடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சூரியகந்த காவல்துறை உத்தியோகத்தர், தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து இரத்தினபுரியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“நான் சமீபத்தில் கடன் பெற்று பைபாஸ் சத்திரசிகிச்சை செய்து கொண்டேன். தற்போது வருமானம் இல்லாததால் அந்த கடனைத் திருப்பிச் செலுத்தவும், குடும்பத்தைப் பராமரிக்கவும் வழியின்றித் தவிக்கிறேன்.”

“நான் எனது கடமையை செய்து கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்தது. என்னைத் தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர் கைது செய்யப்படவும் இல்லை. ஆனால் நான் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் O/L பரீட்சைக்குத் தயாராகும் தனது இரு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.