சர்ச்சைக்குரிய மருந்து தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமனம்
ஒன்டன்செட்ரோன் (Ondansetron ) மருந்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,
இந்த மருந்து இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது .
ஒன்டன்செட்ரோன் மருந்தை பயன்படுத்திய பின்னர் இரு இறப்புகள் பதிவாகிய சம்பவம் தொடர்பிலும் , அந்த மருந்துடன் தொடர்புடைய சாத்தியமான சிக்கல்களை மதிப்பிடுவது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார் .
நாடு முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் ஒன்டன்செட்ரோன் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இதேநேரம் சர்ச்சைக்குரிய மருந்துகளை சர்வதேச தரத்திலான ஆய்வுகூடம் ஒன்றில் பரிசோதிக்குமாறு, சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனம் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பி ‘மான் பார்மசியூட்டிகல்ஸ்’ எனும் இந்திய நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கான செலவுகளை ஏற்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார் ..
‘மான் பார்மசியூட்டிகல்ஸ்’ நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ உள்ளிட்ட 10 வகையான தடுப்பூசி மருந்துகளின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது ..
