இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்துமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் அதன் செயற்பாட்டுத் திறனை உறுதிப்படுத்தும் வகையில், அதற்குத் தேவையான போதிய நிதி மற்றும் மனித வளங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆணைக்குழு தற்போது எதிர்நோக்கி வரும் சவால்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது..

குறிப்பாக கடுமையான ஊழியர் பற்றாக்குறை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை,இத்தகைய குறைபாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை நேரடியாகப் பாதிப்பதுடன், அதன் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குத் தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை என்பது ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் ஒரு அடிப்படை உரிமையாகும்.

அரசியலமைப்பின் 14 அ உறுப்புரையின் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையைப் பாதுகாப்பதில் அந்த ஆணைக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே, அந்த ஆணைக்குழுவின் சுயாதீனமான செயற்பாடு நாட்டின் நலனுக்கு மிக முக்கியமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குடிமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்படக்கூடிய எந்தவொரு திருத்தத்தையும் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுடன் முறையான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் தகவல்களை வழங்குவதில் காட்டும் தயக்கங்கள் மற்றும் ஆணைக்குழுவின் நிதிச் சுதந்திரம் தொடர்பில் நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பது புதிய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.