அனர்த்தத்தினால் உட்கட்டமைப்புகளுக்கு பாரிய சேதம்
இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமையால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வீதி மற்றும் மின்சாரத் துறைகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 316 வீதிகளும் 40 பாலங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் ஏற்பட்ட நஷ்டம் 75 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இவற்றை முழுமையாகப் புனரமைக்க 190 பில்லியன் ரூபாய் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக உலக வங்கியிடம் 2 பில்லியன் ரூபாய் கடன் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேநேரம் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லெகோ (LECO) நிறுவனத்துக்கு 252 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது
.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு 5.6 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 156 நீர் வழங்கல் திட்டங்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியின் மானியங்கள் ஊடாகப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
