
சில அலுவலக ரயில்கள் இன்று வழமைக்கு திரும்பின
இன்று (10) முதல் பிரதான ரயில் மார்க்கத்தில் சில அலுவலக ரயில்களை வழமை போல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையால் , அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையே உள்ள புஜ்ஜொமுவ ரயில் நிலையம் அருகில் அமைந்திருந்த ரயில் மார்க்கத்தின் மதகு, அருகில் பாயும் மா ஓயா நோக்கித் தள்ளப்பட்டு உடைந்தது.
இதனால் ரயில் மார்க்கத்தின் அடியில் சுமார் 45 அடி ஆழமான பள்ளம் உருவாகியிருந்தது.
இதனால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், பிரதான, வடக்கு மற்றும் கிழக்கு ரயில் மார்க்கங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால், ரயில் போக்குவரத்து கொழும்பு கோட்டை முதல் அம்பேபுஸ்ஸ வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தன்னார்வக் குழுக்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன், அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையே புஜ்ஜொமுவ ரயில் மார்க்கத்தில் இருந்த தடைகள் அகற்றப்பட்டு, நேற்று ரயில் மார்க்கம் சீரமைக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
