முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும் பொங்கல் விழாவும்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திகாந்தனின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐம்பது பானை பொங்கல் நிகழ்வும் மற்றும் இரத்ததான நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை, பனிச்சங்கேணி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது. விசேட அபிசேக பூசையினை தொடர்ந்து, ஆலய முன்றலில் 50 பானை வைத்து பொங்கல் பொங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கல்வி, கலை, பண்பாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் முன்வந்து இரத்ததானம் செய்தார்கள்.
வாகரை பிரதேச கட்சி ஆதரவாளர்களினால் ஒழுங்கமைப்பட்ட நிகழ்வில், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தவிசாளர் கதிர்காமதம்பி தெய்வேந்திரன், கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதி தலைவர் ந. திரவியம், பொது செயலாளர் பூ. பிரசாந்தன், கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள் .
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கடத்தலுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து, பயங்கரவாத விசாரணை பிரினரால், கடந்த ஏப்ரல் மாதம் மட்டக்களப்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, இன்றுவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.