கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவு!

 

-அம்பாறை நிருபர்-

கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் பகல் இரவு பாராது ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகள் தினமும் பொதுப்போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன.

இப்பகுதியில் உள்ள அரச தனியார் நிறுவனங்களிற்கு முன்பாக தினமும் சஞ்சாரம் செய்வதுடன் அப்பகுதிகளை சுகாதார சீர்கேடான இடங்களாக மாற்றுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றமும் ஏற்படுகின்றது.

மாநகர சபையினால் கடந்த காலங்களிவ் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை பொலிஸாருடன் இணைந்து பிடித்ததை போன்று எதிர்காலத்தில் மாடுகளினால் அன்றாடம் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னர் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.