திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதுடன், தவிசாளராக வெள்ளத்தம்பி சுரேஸ்குமார், உப தவிசாளராக சுயேட்சைக்குழு உறுப்பினர் கைலயநாதன் வைரவநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மதியம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் பதவிக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி வெள்ளத்தம்பி சுரேஸ்குமார் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.எச்.எஸ்.சந்துர லக்மல் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இந்நிலையில் குறித்த தெரிவு பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி உறுப்பினர் வெள்ளத்தம்பி சுரேஸ்குமாருக்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் -6 பேர், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் -3 பேர், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் -2 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் -1, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் -1, கூயேட்சைக்குழுக்களின் உறுப்பினர்கள் 3 பேர் உட்பட 16 பேர் வாக்களித்திருந்தனர். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.எச்.எஸ்.சந்துர லக்மல் என்பவருக்கு ஆதரவாக் அக்கட்சியின் 4 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இதன் அடிப்படையில் 12 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வெள்ளத்தம்பி சுரேஸ்குமார் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஏ.எல்.எம்.நௌபர், சுயேட்சைக்குழு 01 உறுப்பினர் செல்லத்துரை புவிராஜ், சுயேட்சைக்குழு 05 உறுப்பினர் கைலயநாதன் வைரவநாதன் ஆகிய மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதற்கான வாக்கெடுப்பை போரியபோது ஒருவரைத் தவிர ஏனையோர் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவு வழங்கியதால் உப தவிசாளருக்காக பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் சுயேட்சைக்குழு 05 உறுப்பினர் கைலயநாதன் வைரவநாதனுக்கு ஆதரவாக 9 பேரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஏ.எல்.எம்.நௌபருக்கு ஆதரவாக 7 பேரும் வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் 4 பேரும் வாக்களிப்பை தவிர்த்துக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் சுயேட்சைக்குழு 05 உறுப்பினர் கைலையநாதன் வைரவநாதன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.