முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ். யுவதி தேசிய ரீதியாக சாதனை
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள் மற்றும் ஏனைய போட்டியாளர்களுடன் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
குறித்த யுவதி கருத்து தெரிவிக்கையில்,
நான் இந்த ஆண்டு union national meet இல் 10 ஆயிரம் மீட்டர்கள் வேகநடை போட்டியில் மூன்றாமிடம் வந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளேன். இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பாடசாலை மட்ட ரீதியாக 5 ஆயிரம் மீட்டர்கள் வேகநடைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டேன். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முப்படை வீரர்களுடன் போட்டியிட்டே இந்த மூன்றாவது இடத்தை பெற்றுள்ளேன்.
எனது ஆரம்பகால பயிற்றுனராக சுபாஸ் ஆசிரியர் மற்றும் நிசாந்தன் அண்ணா, பிரதீஸ் அண்ணா ஆகியோர் காணப்படுகின்றனர். தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட விளையாட்டுத்துறை பொறுப்பாளர் விஜிதரன் ஆசிரியர் எனது பயிற்றுவிப்பாளராக காணப்படுகின்றார்.
நான் முன்னர் போட்டிகளில் வெற்றுக் கால்கள் மூலமாகவே போட்டியிட்டேன். பின்னர் நிதி அனுசரணையாளர்கள் மூலம் எனக்கு இந்த போட்டிக்கு தேவையான சப்பாத்து வாங்கி தரப்பட்டது. விக்டோரியா கழகம், குணா அண்ணா, மதி அண்ணா ஆகியோரே எனக்கு நிதி உதவிகளை வழங்குகின்றனர்.