அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய சி.சி.ரி.வி கமராக்கள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம், வாகன புகைகளால் அதிகரித்து வரும் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஏற்கனவே பல உத்திகளை செயல்படுத்தி வருகிறது.

வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் ஒரு மதிப்புமிக்க தேசிய சொத்து என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கூறினார்.

வாகனப் புகை முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு பொலிஸ் சிசிடிவி தரவுகளைப் பயன்படுத்துவதோடு, சிசிடிவி கமரா அமைப்பை நவீனமயமாக்கவும் மேலும் விரிவுபடுத்தவும் இந்த நிதியம் முழு ஆதரவையும் வழங்கும் என்று அவர் கூறினார்.