தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்கள் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகள், நீதியரசர்களான ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வால் செப்டெம்பர் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனுக்கள் அடுத்த விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளன.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், மனுதாரர்கள் இந்த நியமனம் அரசியலமைப்பின் பொருந்தக்கூடிய விதிகளுக்கு முரணானது என்று பரிந்துரைக்கும் வலுவான முதன்மை வழக்கை முன்வைத்துள்ளனர் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.
பொலிஸ் மா அதிபராக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்களின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.
பேராசிரியர் சாவித்திரி குணசேகர, நிரோஷன் பாதுக்க, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, தரிந்து இரங்க ஜயவர்தன, ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆதம் லெப்பை ஆசாத், எஸ்.கே. பிரியங்கா மற்றும் ஏ.என்.எஸ். சொய்சா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதில், ஜனாதிபதி, அரசியலமைப்பு பேரவையின் தலைவர், சபாநாயகர், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள், சட்டமா அதிபர் மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.










