
2025 ஆம் ஆண்டுக்காக தேசிய வெசாக் தின நிகழ்வுகள் நுவரெலியா நகரில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த நகரமே அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளிக்கின்றது.
நுவரெலியாவில் பல பகுதிகளிலும் வெசாக் அலங்கார விளக்குத் தோரணங்கள் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் கடந்த 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஏராளமான தானசாலைகள் அமைக்கப்பட்டு தானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாலை நேரத்தில் அதிகமானவர்கள் நுவரெலியாவில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தல்கள் மற்றும் வெசாக் வலயங்களை பார்வையிட ஒரே நேரத்தில் வருவதனால் பிரதான வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பல மணித்தியாலயங்கள் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .
இதனால் நுவரெலியா நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தல்கள் மற்றும் வெசாக் வலயங்களை சுற்றிப்பார்க்க முடியாதநிலை ஏற்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த போக்குவரத்து நெரிசலில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒரு மணி நேரமாக வெளியேற முடியாமல் தரித்திருந்தமை சுட்டிக்கபட்ட தக்கது.
குறிப்பாக தொடர் விடுமுறை நாட்களிலும் அல்லது நுவரெலியா நகரை மையமாக கொண்டு இது போன்று விசேட நிகழ்ச்சிகள் இடம்பெறும் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் இடையூறு ஏற்படுவதாகவும் சாரதிகளும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே இனி வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களின் போது புதிய போக்குவரத்து நெறிமுறைகளை ஏற்படுத்துமாறும், இதனை சீர்செய்வதற்கு தேவைக்கேற்ப கூடுதலான பொலிஸாரை பணியமர்த்த வேண்டும் எனவும் இதன் மூலம் சாரதிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்க முடியும் எனவும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
