
-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா பிரதேச செயலகத்தில், இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக, ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால், இன்று திங்கட்கிழமை நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக, பிரதேச மக்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.
குறித்த அலுவலகத்தில், விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் யாரும் ஈடுபடவில்லை எனவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நிலவிய வானிலை சீற்றத்தினால் பெய்த கடும் மழை காரணமாக, கடந்த வாரங்களில் இவ்வாறான அலுவலகங்களுக்கு சேவையினை பெற்றுக் கொள்ள வரும் மக்களின் எண்ணிக்கை குறைவான இருந்தது.
தற்போது சீரான காலநிலை நிலவி வருவதனால், மக்கள் ஒரே நேரத்தில் வருகை தந்ததன் காரணமாக இவ்வாறு நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாக, அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
