16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று வியாழ்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கமைய டிக்டொக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும். தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததும், அதனை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ்,

“சிறுவர்களை கைத்தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களிலிருந்து விலகி, விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.

சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இது உலகளாவிய பிரச்சனை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன” என குறிப்பிட்டார்.