மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளுக்காக 6750 ஊழியர்கள் தேர்வு

*மட்டக்களப்பு நிருபர்-

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம் பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இது இலங்கையில் ஆகக் குறைந்த அதாவது இரண்டு பேர் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையமாகும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குப்பட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 7:00 மணி முதல் மட்டக்களப்பு தேர்தல் மத்திய நிலையமாக விளங்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரிகளில் இருந்து விநியோகிக்கப்படும்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமாக 1514 பொலிசார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட உள்ளனர். இது வரையிலும் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்காளர் அட்டையினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதுவரையில் 52 முறைப்பாடுகள் தேர்தல் பிணக்குகளை ஈர்க்கும் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் காரியாலயங்களிலும் இணைப்புக் காரியாலங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயற்படும்.

தேர்தல் முறைப்பாட்டு காரியாலயங்களாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திலும் , கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலகத்திலும் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

முறைப்பாடுகள் கிடைக்கின்ற போது உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய ஒழுங்குகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம்.

21 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தபால் மூல வாக்கெண்ணும் பணியில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் அன்றைய தினம் நேரத்திற்கு வருகை தருவதுடன், ஏனைய வாக்கெண்ணும் உத்தியோர்கள் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு வருகை தந்து தேர்தல் மத்திய நிலையமாக காணப்படும் மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்- என்று மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்