யாழ் பெண்ணின் ரிக்ரொக் வீடியோ: பல லட்சங்களை இழந்த சுவிஸ் நபர்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணின் ரிக்ரொக் வீடியோக்களை பயன்படுத்தி சுவிஸில் இருந்தவரிடன் பணமோசடிசெய்த 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற 52 வயதுடைய நபரே இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில்மேலும்தெரிய வருகையில்,

குறித்த சுவிஸில்வாழும் நபரின் வட்ஸ் அப் கணக்குக்கு 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் ரிக்ரொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன.

அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர். ரிக்ரொக் கணக்கில் பதி வேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.

இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப்பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார். ரிக்ரொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பரி மாற்றம் நடந்திருக்கின்றது. சுவிஸில் உள்ளவரும் 47 இலட்சம் ரூபா வரையில் கொடுத்திருக்கின்றார். அதன் பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட அவர் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணறோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ரிக்ரொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது. அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் ரிக்ரொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்தன.

அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார். அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தை பெற்றிருப்பது விசாரணைகளில் தெரியவந்தது.

மேலும் இவர்களின் அன்ரி என்று அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். ரிக்ரொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை பெற்றுள்ளமையும் விசாரணையில் கண்டறியப் பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது. பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்