உயிரிழந்த மீனவரின் சடலம் கடல் வழியாக இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது

-மன்னார் நிருபர்-
ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க வந்து இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் இன்று சனிக்கிழமை அதிகாலை  கடல் வழியாக ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தை சென்றடைந்தனர்.
இலங்கை கடற்படை ரோந்து படகு ஒரே முட்டு முட்டியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கிய தாகவும் உள்ளாடைகளுடன் கடற்படை வீரர்கள் அழைத்துச் சென்று விசாரித்ததாக உயிர் தப்பிய இந்திய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மலைச்சாமி (வயது 59) என்ற மீனவர் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (வயது 64) என்ற கடலில் மீனவர் மாயமாகி உள்ளார்.
மேலும், முத்து முனியாண்டி,  மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம்  காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று  வெள்ளிக்கிழமை மதியம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் மற்றும் உயிரிழந்தவரின் உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைக்கப்பட்டது.
அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில்  வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைத்தனர்.
உடலை பெற்று கொண்ட கடற்படை வீரர்கள்  ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திற்கு எடுத்து சென்று ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
உயிருடன் ஒப்படைக்கப்பட்ட  மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், உயிரிழந்தவரின்  சடலம் அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்