நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது திறைசேரியில் பணமிருக்கவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது திறைசேரியில் பணமிருக்கவில்லை, இப்போது அரசிடம் ஓரளவு பணம் உள்ளது, அந்த பணத்தை இளைஞர்களுக்காக பயன்படுத்த எதிர்பார்கிறேன், என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம் ‘ வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2000 இளம் பெண் சாரணர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவி சாந்தி வில்சன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது திறைசேரியில் பணமிருக்கவில்லை. நாம் இப்போது கடினமான காலங்களை கடந்துவிட்டோம். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பதை இப்போது நிறுத்திவிட்டோம். மேலும், வெளிநாட்டு கடன்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நாம் செலுத்த வேண்டிய கடன் தொகையும் குறைந்துள்ளது. எனவே இப்போது அரசிடம் ஓரளவு பணம் உள்ளது. அந்த பணத்தை இளைஞர்களுக்காக பயன்படுத்த எதிர்பார்கிறேன்.

தற்போது கல்விக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வருடங்களில் அதற்கு அதிக நிதி செலவிட நேரிடும். சுகாதாரத் துறைக்கும் தேவையான நிதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளோம் , என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் ஜனப்ரித் பெர்னாண்டோ உள்ளிட்ட சாரணர் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்