
கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக எமது செய்திச் சேவை அவரிடம் வினவிய போது அவர் இவ்விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதயாத்திரை தொடர்பில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உரிய அமைச்சர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் இவ்விடயத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் 30ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அத்திகதியில் மாற்றம் ஏற்பட்டு அடுத்த மாதம் 02ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது.
இதனால் குழப்பமடைந்த யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கு மாகாணம் வரையுள்ள பாதயாத்திரிகர்களும் பொது அமைப்புக்களும் இவ்விடயத்தை ரெலோ அமைப்பினர் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
அதன்பிரகாரம் இவ்விடயத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி உரிய திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இம்மாதம் 30 ஆம் திகதி கதவு திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநரும் உரிய அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் ஆளுநர் மூலம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கதிர்காம யாத்திரைக்கான பாதை திறப்பில் குழப்பம் ஏற்பட்டமை தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் (சமூக வைத்தியம்) அழகைய்யா லதாகரன் எமது செய்தித்சேவையின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரி ஒருவர் தன்னுடைய இயலாமையால் பாதயாத்திரைக்காக பாதை திறக்கப்படும் காலத்தை குறைத்துள்ளார் எனவும் குறித்த தனிமனிதருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த அரச அதிகாரியும் ஒரு இந்து மதத்தவர் எனவும் வைத்தியர் அழகைய்யா லதாகரன் கவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் அழகைய்யா லதாகரனின் நேர்காணல்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
