மட்டக்களப்பு மட்டிக்களியில் காணி அபகரிப்பு: தீர்வு கிடைக்காவிடின் போராட்டத்தில் குதிக்கவுள்ள மக்கள்

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக அத்து மீறிய காணி அபகரிப்புக்கள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது மட்டிக்களி பிரதேசத்திலும் தனிநபர் ஒருவரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணி அபகரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி அபகரிப்பு தொடர்பிலான ஊடக சந்திப்பொன்று மட்டிக்களியில் உள்ள திரௌபதி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் தலைமையில் இன்று ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயம்,

 

மட்டிக்களி திரௌபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் போது மஞ்சள் நீராட்டும் இந்து மக்களால் புனிதமாக போற்றப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான ஆற்றோடு இணைந்த காணி பரப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனி நபர் ஒருவர் கையகப்படுத்தியுள்ளார்.

இதன்போது குறித்த பகுதி மக்கள் அவரிடம் வினவியபோது தாம் மழை காரணமாக இந்த இடத்தில் தற்காலிகமாக தங்கி இருப்பதாகவும் காலநிலை சீரானதும் இந்த இடத்தை விட்டு சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறு கூறி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் குறித்த நபர் அவ்விடத்தை விட்டு செல்லாமல் இருப்பதுடன் தற்போது குறித்த பகுதியில் வேலி அமைத்துள்ளாதாகவும் அதனை கேட்டதற்கு தம்முடன் குறித்த தனி நபர் முறண்படுவதாகவும் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த காணியை தாங்கள் காலம் காலமாக அதன் புனித தன்மை மாறாமல் பாதுகாத்து வருவதாகவும் இதற்காகவே குறித்த பகுதியில் உள்ள மீனவர்கள் கூட இப்பகுதியில் தமது எந்தவொரு பொருட்களையும் வைப்பதில்லை எனவும் எனினும் தற்போது குறித்த தனி நபரால் இந்த இடத்தின் புனித தன்மை பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குறித்த தனி நபருக்கு ஆதரவான சில அரச அலுவலர்களும் செயற்படுவதாகவும் தற்போது குறித்த பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

இவ்வாறு ஒரு தனி நபரால் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி அபகரிப்பிற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் மட்டிக்களி கிராமத்தில் உள்ள அத்தனை சங்கங்களும் இணைந்து பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம் நடாத்துவோம் எனவும் அவர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்