சாதாரண மற்றும் உயர்தர பரிட்சை எழுதும் மாணவர்களும் அவர்களது கனவுகளும்
-சௌமினி சுதந்தராஜ்-
எதிர்வரும் 31 ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ள இதேவேளை கடந்த வாரம் சாதாரண பரீட்சை நடைபெற்று முடிந்துள்ளது.
எமது பிரதேசங்களில் உள்ள படிப்பறிவு உள்ள மக்களும் சரி பாமர மக்களும் சரி தங்களுடைய எதிர்கால சந்ததியினர் தங்களை விட கல்வி அறிவிலும் செல்வத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பது இயல்பே.
அந்த வகையில் தற்போது வெளிவரவுள்ள சாதாரணதர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தங்களது அடுத்த கட்ட நகர்வாக அதிகூடிய புள்ளிகளை பெற்று பல்கலைகழகத்தில் நுளையும் வாய்ப்புக்கள் கிடைக்கும் மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு செல்வார்கள், பல்கலைகழக வாய்ப்பை பெற தவறியவர்கள் தனியார் அல்லது அரச மேலதிக கற்கை நிறுவனங்களில் இணைந்து தங்களது கல்வி செயற்பாட்டை முன்னெடுத்து செல்வார்கள்.
ஆனால் இவர்களை விடவும் குறைவான புள்ளிகளை பெற்று மேலதிக கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத மாணவர்கள் இந்த இடத்தில் தான் சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்கபெறாமல் வழி மாறி செல்கிறார்கள். அவர்களுக்கு மேலதிக கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில் அல்லது மேலதிக கல்வியை எவ்வாறு தொடர்வது என்ற பூரண அறிவு இல்லாத பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கையில் மேலதிக கல்வி கேள்விக்குறியாக மாறிவிடுகின்றது.
எமது நாட்டை பொறுத்த வரையில் உயர்தர படிப்பை முடித்த பின்பு பல்கலைகழகம் செல்ல வேண்டும் அவ்வாறு பல்கலை கழகம் செல்ல முடியவில்லை என்றால் பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் கிடைத்த வேலையை செய்யும் அவல நிலை அல்லது திருமண பந்தத்திற்குள் இணைந்து விடுவார்கள்.
இது மட்டுமல்லாமல் சாதாரண தரம் எழுதிய மாணவர்களில் தொழில் துறைக்கு அதிதிவாரம் இடப்படுவது உயர் தரத்தில் எனலாம் அந்த அளவிற்கு தங்களது தொழில் துறையை தேர்தெடுக்க அவசியமான அல்லது தொழில் கனவுகளை நிறைவேற்ற கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கற்கை நெறியான உயர்தரத்தில் மாணவர்களுக்கு தங்களுடைய கனவுகளை நோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கும் பக்குவமோ அறிவோ மிகவும் குறைவாக காணப்படும்.
இவ்வாறு தங்களது கனவுகளை நோக்கி நகர காத்திருக்கும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததன் காரணத்தினால் நண்பர்களை பார்த்தோ அல்லது பிறர் சொல்வதை கேட்டோ உயர்தரத்தில் தங்கள் கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள்.
இதன்காரணத்தால் அவர்களுடைய கனவு தொலைந்து போவது மட்டுமல்லாமல் பல்கலைகழக வாய்ப்புக்களும் தொழில் வாய்ப்புக்களும் தவறிவிடும் சந்தர்பங்களே இங்கு அதிகம்.
இது எமது கல்வி முறைமையில் இருக்கும் குறைபாடுகள் என்பதை தாண்டி எங்களுக்கு மேல் உள்ள படித்த சமூகம் அல்லது கல்வி கட்டமைப்புகளை அறிந்த சமூகம் அவற்றை முறையாக சரியான நபர்களிடம் கொண்டு செல்லாமல் விடுவதாலும் அடுத்த சந்ததியினருக்கு இந்த கட்டமைப்புக்கள் கடத்தப்படாமல் விடப்படுவதுமே பலரது கனவுகள் கேள்வி குறியாக மாறுவதற்கு காரணமாய் அமைந்துள்ளது.
தற்போது பரீட்சை எழுதியுள்ள மாணவர்களுக்காவது சரியான கட்டமைப்புக்கள் தெரிவுபடுத்தப்பட்டு அவர்களுடைய கனவுகளை நோக்கி அவர்கள் செல்ல வழி அமைத்து கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பல்கலைகழகத்தை தாண்டி பல நெறிமுறைகள் இருப்பதையும் மக்கள் உணர்ந்து எமது சமூகத்தில் காலம் காலமாக உள்ள நடைமுறைகள் எதிர்காலத்திலாவது மாற்றப்பட வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்