2023 ஆம் ஆண்டில் 1,153 பேருக்கு மரண தண்டனை

மத்திய கிழக்கு நாடுகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வீதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 8 ஆண்டுகளில் 2023ஆம் ஆண்டிலேயே அதிகளவானோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 16 நாடுகளில் 1,153 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத அதிகரிப்பாகும்.

ஈரானில் மாத்திரம் 74 சதவீதமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி 2023ஆம் ஆண்டு ஈரானில் 853 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சவுதி அரேபியாவில் 15 சதவீதமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சீனா, வடகொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் இரகசியத் தன்மைக் காரணமாக அவற்றின் தரவுகள் முன்வைக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச ரீதியாக மரண தண்டனை வழங்குதல் அதிகரித்துள்ள போதிலும் அதனை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கை இன்று வரை மிகக் குறைவாகவே உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்