பட்டதாரி ஆசிரியர் நியமனம் மறு அறிவித்தல்வரை ஒத்தி வைப்பு
-மூதூர் நிருபர்-
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் மறு அறிவித்தல்வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனம் இன்று செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சினால் வழங்கப்பட இருந்த நிலையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பெறுபேறுகளில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக குறித்த நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை 3-1(அ) தரத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான இறுதித் தேர்வுப்பட்டியல் மற்றும் மொத்த புள்ளிகள் பட்டியல் கிழக்கு மாகாண இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் தனிப்பட்ட ரீதியாக வழங்கப்பட்ட மொத்தப் புள்ளிக்கும், இறுதித் தேர்வுப்பட்டியலில் வெளியிடப்பட்ட மொத்த புள்ளிகளுக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டமையே இதற்கு காரணமாகும்.
மேற்குறித்த போட்டிப்பரீட்சையின் தரவு உள்ளீடு செய்யும் கணனி அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக அந்த போட்டிப் பரீட்சை சம்பந்தமான மேல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கணனி அமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இறுதித் தேர்வு பட்டியல், மொத்த புள்ளிகள் பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் குறிப்பிட்டு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.மன்சூர் ஒப்பமிட்டு பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் ஒன்றை திங்கட்கிழமை வெளியிட்டிருந்தார்.
கிழக்கு மாகாண, மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3-1(அ) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் கோரப்பட்டு பின்னர் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.
குறித்த பரீட்சையில் தோற்றி பின்னர் நேர்முகத்தேர்விலும் பங்குபற்றிய பரீட்சாத்திகளுக்குரிய இறுதித் தேர்வுப்பட்டியல் மற்றும் மொத்த புள்ளிகள் பட்டியல் கிழக்கு மாகாண இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் மறு அறிவித்தல்வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்