தனியார் காணிகளை சுவீகரிக்கும் கம்பெனிகள் : காணி உரிமையாளர்களை சந்தித்தார் சுமந்திரன்

-மன்னார் நிருபர்-

மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக சில காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் கம்பெனிகள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் சந்திப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மெசிடோ அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் நடுக்குடா,கொன்னையன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக தாங்கள் வசித்து வரும் காணிகளை தனியார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக அடாத்தாக வேலிகள் அடைத்து கையகப் படுத்துவதாகவும், இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்தாலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பது இல்லை என தனியார் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் தனி காணி ஒன்றை கொள்வனவு செய்யும் சில நிறுவனங்கள் அந்த காணிகள் மாத்திரம் இன்றி அதை சூழ உள்ள காணிகளையும் சுவீகரிப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் காணி உரிமையாளர்களுக்கு சட்டத்தரணி சுமந்திரனால் தெளிவுபடுத்தப்பட்டது டன் குறித்த பிரச்சினை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்க பட்டது.

அதே நேரம் இம்மாதம் இவ்வாறு சட்ட விரோதமாக காணி சுவீ கரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு எதிராக முதல் கட்டமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறு தனியாருக்கு சொந்த காணிகள் தனி நபர்களாலும் சில நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டு கணிய மணல் அகழ்வுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்