ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்களை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவில் கைதான நான்கு சந்தேகநபர்களில் 2 பேர் அடிக்கடி இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைவாக சந்தேநபர்களான மொஹமட் நுஸ்ரத் 38 தடவைகளும் மொஹமட் நஃப்ரான் 40 தடவைகளும் இந்தியாவிற்கு பயணித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் தங்களது தீவிர மனப்போக்கை, முன்னதாக ஏனைய அமைப்புகள் ஊடாகவும் காட்டியுள்ளதாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் இலங்கையில் வசித்த பகுதிகள் அடையாளம் காட்டியிருந்ததாக அவர்களில் மூவர் கொழும்பில் வசித்ததாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் கடந்த 20ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற உளவுத்துறை தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் சென்னையில் இருந்து அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளதுடன் இந்தியாவின் தென் பகுதியில் இருந்து சென்ற பயணிகளின் பட்டியலுக்கு அமைய, அவர்களை அடையாளம் காண முடிந்ததாக இந்திய பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசும் உதவியதாக குஜராத் காவல்துறையின் பிரதானி தெரிவித்துள்ளார்.

குறித்த நால்வரும் பாகிஸ்தானில் உள்ள அபு என்ற நபருடன் சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கிய தொடர்பை பேணியமை தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக அபு என்பவர் குறித்த நால்வரையும் ஊக்குவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்