மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம் : கொட்டும் மழையிலும் எதிர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்-

மன்னார் -நானாட்டான் நகர பகுதிக்குள் எந்த ஒரு மது பானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம் திங்கட்கிழமை மத தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள்இமகளிர் அமைப்புகள்இஅரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நானாட்டானில் இந்து மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களில் மென் மதுபான விற்பனை நிலையம் காணப்படும் அதே நேரம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கள்ளுத்தவறணை காணப்படுவதாகவும் மென் மதுபான சாலையை உடனடியாக நிறுத்தும் படியும் அதே நேரம் நானாட்டான் ஒலி மடு பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணை யை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், இந்து ஆலய குருக்கள், முருங்கன் விகாராதிபதி, முன்னாள் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்தின் இறுதியில் பாடசாலைக்கு அருகில் இயங்கி வரும் மென் மது பானசாலைக்கான அனுமதியை உடனடியாக நிறுத்த கோரியும் , ஒலி மடு பகுதியில் இயங்கிவரும் கள்ளுத்தவறணையை இடம் மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்கான மகஜர் நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு கனகம்பிகையிடம் கையளிக்கப்பட்டது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்