நீராட சென்ற பெண் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்-

லுணுகலையில் பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக் கிழமை சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை, ஜனதாபுர, தும்பபிட்டிய வத்தவில் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை 3 மணியளவில் குளிப்பதற்கு தனது 11 வயது மகனுடன் கும்புக்கன் ஓயாவுக்குச் சென்று தனது மகனை குளிக்க வைத்த பின் மகனை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் தனது தாயின் அலறல் சத்தம் கேட்டு 17 வயதுடைய குறித்த பெண்ணின் மகள் தனது தாய் குளித்த இடத்திற்கு சென்று பார்த்த போது தாய், தலையில் காயங்களுடன் தண்ணீரில் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரிடம் தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாரிடம் மகள் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டதாகவும் லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்