போலி கால்நடை வைத்தியர் கைது

நுவரெலியாவில் போலி கால்நடை வைத்தியர் திம்புள்ள- பத்தனை பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் – கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டகலை பிரதேசத்தில் கால்நடை பண்ணை ஒன்றில் நோயுற்ற பசுவிற்கு சிகிச்சை அளிப்பதாக தலவாக்கலை பிரதேசத்திற்கு பொறுப்பான அரச கால்நடை வைத்தியர் ஏ.ஏ.சுரேஷ் குமாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திம்புள்ள- பத்தனை ஸ்தலத்துக்குச் சென்று, போலி வைத்தியரை கைது செய்துள்ளனர்.

இவர் ஹட்டன் மற்றும் நுவரெலியா பொலிஸ் பிரிவில் கால்நடை பண்ணைகளை நடத்தி வருபவர்களிடம் சென்று நோயுற்ற கால்நடைகளுக்கு பணம் பெற்று சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அவர், சிகிச்சையளித்த கால்நடைகளில் பல உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது சந்தேகநபர் தப்பி ஓடியதாகவும், பொலிஸார் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்த போதும் சந்தேக நபர் தப்பிச் செல்லும் போது கீழே விழுந்ததால் காயங்களுக்கு உள்ளானதால் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்தார்.

சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்