பெண்ணின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி

இந்தியாவில் பெண்ணொருவரின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சை  மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த வர்ஷா (வயது – 35) எனும் பெண்ணுக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கடந்த சில தினங்களாக வறட்டு இருமல் காரணமாக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தான் திடீரென, தொடர்ந்து இருமும்போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூச்சுக் குழாயில் ஏதோ ஒரு சிறிய பொருள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, உடனே சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அது மூக்குத்தியில் இருக்கும் திருகாணி என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதன்போது கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் தனது திருமணத்திற்காக அணிந்த மூக்குத்தியின் திருகாணி இது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடும் முயற்சிக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண்ணின் மூச்சுக் குழாயிலிருந்து மூக்குத்தியில் இருக்கும் திருகாணியை மருத்துவர்கள் அகற்றினர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் குழு கூறியதாவது :

இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது. பொதுவாக, சில நேரங்களில் உலர் பழங்கள் அல்லது சிறிய பொருட்களை நுரையீரல்களுக்குள் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளோம். ஆனால், இந்த சம்பவம் மிகவும் அரிதாக உள்ளது என்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்