
அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு விஜயம்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வலுத்திறன் குறித்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
குறித்த கூட்டம் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ‘நகர்ப்புற எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்’ மற்றும் ‘வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ ஆகிய இரண்டு அமர்வுகளில், குழு உறுப்பினராக இணைந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர், சவூதி அரேபியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரியாத்திலுள்ள இலங்கை சமூகத்தினரையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதன்போது சந்திக்கவுள்ளார்.
அத்துடன், அங்கு அமைந்துள்ள இலங்கை சர்வதேச பாடசாலைக்கும் அவர் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
