வழியில் பார்ப்போரையெல்லாம் சரமாரியாக வெட்டிய இளைஞர்கள்

இந்தியாவில் பெண்களை ஆபாசமாக பேசியதை கண்டித்த 2 தாய், மகன்கள், கல்லூரி மாணவன் உட்பட 12 பேரை சரமாரியாக வெட்டிய போதை ஆசாமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வந்த ஏசி மெக்கானிக்கான அபினேஷ் (வயது – 25), விஷ்ணு (வயது – 22) மற்றும் முத்து ஆகிய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இவர்கள் மூன்று பேரும் அவ்வப்போது மது மற்றும் கஞ்சா போதையில் தாங்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் அமர்ந்து தகராறு செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை மூன்று பேரும் ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பெண்களை தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி (வயது – 38) என்ற பெண் மூவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து மூவரும் சீதாலட்சுமி அவரது மகன் கமலேஷ் (வயது – 17) ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் தங்களது அறையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்திகளை எடுத்து வந்த 3 பேரும், சீதாலட்சுமி மற்றும் அவரது மகன் கமலேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் இருவருக்கும் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த, அதே பகுதியை சேர்ந்த சந்திரலேகா (வயது – 40) மற்றும் அவரது
மகன் அஜய் (வயது – 20) இருவரும் அவர்களை தடுக்க முயன்ற போது மூவரும் இணைந்து
சந்திரலேகா மற்றும் அவரது மகன் அஜயையும் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

மேலும் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த கணேஷ் (வயது – 18) என்ற மாணவன், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மற்றும் அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஒட்டி உட்பட
12 பேரை வெட்டி உள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து இவர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்