யாழ் கடலில் குழந்தையை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்ததையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் குறித்த பெண்ணை ஏற்றி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவவலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்