40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது யுவதி

பொலனறுவை மின்னேரியா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி காயமடைந்துள்ளார்.

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 4 பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய யுவதியே இதன் போது காயமடைந்துள்ளார்.

குறித்த சிறுமி அப்பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபருடன் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வந்துள்ள நிலையில் சில காலம் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது குறித்த நபரின் தொல்லை தாங்க முடியாமல் சில வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு யுவதி திரும்பியுள்ளார். இந்நிலையில் தன்னுடன் வருமாறு அந்த நபர் பல சந்தர்ப்பங்களில் மிரட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு குறித்த சிறுமியும் அவரது தாயாரும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அந்த வீட்டில் இருந்த குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டில் சிறுமியின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த அவர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்