கிராமிய பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வெல்லாவெளி நிருபர்-

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .ஜஸ்டினா முதளிதரன் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

பிரதேச செயலக பிரிவில் உள்ள களுதாவளை மகா வித்தியாலயம், தேற்றத்தீவு மகா வித்தியாலயம், குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்வதற்கு இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் பல வருடங்களாக தமது திறமைகளை நிரூபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் தடை தாண்டல் ஓட்டப் போட்டிக்கான உபகரணங்கள், பரிதி வட்டம், ஈட்டிகள், கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) த.இதயகுமார், பாடசாலைகளின் அதிபர்கள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் த.தஜிவரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்