உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு தேற்றாத்தீவு மக்கள்
மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்கும் வரை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த மக்கள் “தமக்கு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலம் முக்கியமானது, இதன் வளர்சிதான் எமக்குத் தேவை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆயருடன் கதைப்பதற்கு வருமாறு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் எனினும் ஆயர் தங்களை இது வரை சந்திக்கவில்லை என்றும், எனவே ஆயர் வந்து எமது குறைபாடுகளைக் கேட்டறியும் வரையில் எமது உண்ணாவிரதம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்தின் நிருவாகக் குரு அருட் தந்தை ஆர்.திருச்செல்வம் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நான் பழுகாமத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு இன்று காலை சென்று விட்டு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்திற்கு வந்து பார்க்கும் போது ஆலயத்தின் முன்னால் சிலர் உண்ணாவிரத்தில் இருப்பதாக அறிந்தேன். இந்த உண்ணாவிரதத்திற்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
எமது ஆயர் வரவேண்டும் என அந்த மக்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பிரகாரம் இது பற்றி நான் ஆயரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். அந்த வகையில் ஆயர் இங்கு வந்து மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். அவ்வாறு தெரிவித்த பின்னரும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது வேதனையளிக்கின்றது. இது ஆலயத்திற்கு நல்ல செயற்பாடு இல்லை.
எனவே மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்யாமல் அமைதியான முறையில் என்னைச் சந்தித்திருக்க வேண்டும். ஆயரின் பதிலை ஏற்கனவே மக்களுக்குத் தெரிவித்த பின்னரும் அதற்குக் கீழ்படியாமல் இருக்கின்றார்கள் என்பதையிட்டு கவலையடைகின்றேன் என கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்