மட்டு.காத்தான்குடியில் 30 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 பேர் கொண்ட குழு ஒன்றை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் அவரச இலக்கமான 119 இற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால்  நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட 5 பேர் இதில் உள்ளடங்குவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பாலமுனை பகுதியில் திறந்த வெளியொன்றில் கூடாரம் அமைத்து பொழுதுபோக்காக விளையாடிக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டனர் என்றும் கைது செய்யப்பட்ட 30 பேரும் 50 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

காத்தான்குடி பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு விடுமுறை தினமாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் உள்ள வர்த்தகர்கள் வியாழக்கிழமைகளில் ஒன்றுகூடி பொழுதுபோக்காக 304 சீட்டு விளையாடுவது வழக்கம். இவ்வாறு நேற்று வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பலர் சகஜமாக கூடியிருந்த வேளை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த 30 பேரும் சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட விசேட பொலிஸ் பிரிவினரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.