கண்டம் விட்டு கண்டம் தாண்டி மன்னாரில் அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்

 

-மன்னார் நிருபர் –

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டுக்கு அந்நிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலா துறையானது மிகவும் நலிவடைந்து உள்ளது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நூற்றுக்கணக்கான பிளமிங்கோ என சொல்லப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது டன் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறது.

தமிழில் இப்பறவை பெரும் பூநாரை என அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆழமற்ற ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் தீவுகளில் வாழ்கின்றன.

ஃபிளமிங்கோக்களில் 6 இனங்கள் உள்ளன .அவைகள் இறால், ஆல்கா, ஓட்டு மீன்களை சாப்பிடுகின்றன. இடப்பெயர்வின் போது, ஃபிளமிங்கோக்கள் ஒரு மணி நேரத்திற்கு 37 மைல்கள் வரை பறக்கின்றன. மற்றும் 300 மைல்களுக்கு மேல் பயணம் செய்து தங்கள் புதிய வாழ் விடத்திற்கு செல்லக்கூடியவை.

ஃபிளமிங்கோக்கள் என்பது நாரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும்.

நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும்.

கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளை உடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகம் உள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, கூட்டம் கூட்டமாக பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.

பூநாரைகள் எளிதாக நீந்தக் கூடியது இந்த பறவைகள் முக்குளித்தல் நிலையிலேயே புழுக்களை அரித்து உண்ணும். செங்கால் நாரைகள் வாத்து பறப்பது போன்ற அமைப்பிலோ அலையலையான நீண்ட சாய்வுக் கோடுகளாகவோ வேகமாகச் சிறகுகளை அடித்துப் பறந்து செல்லும்.

ஒடுங்கிய கழுத்தை நீட்டிப் பறக்கும்போது சிவந்த கால்களையும் சேர்த்து பின்னால் நீட்டிக் கொள்ளும். இவை சப்தமிடுவதில்லை. ஆனால் சில சமயங்களில் வாத்துகள் போன்று ஒலி எழுப்பக் கூடியவை. இரை மேயும்போது கூட்டத்தில் உள்ள அனைத்து பறவைகளும் தொடர்ச்சியாகப் பிதற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.

பூநாரைகள் உண்ணும் கூனி போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும்.இவ் உயிரினங்களின் அளவு குறைவதாலும் மாறிவரும் இயற்கை சமநிலை காரணமாகவும்,கதிர்வீச்சுக்கள் காரணமாகவும் இப்பறவையினம் குறைந்து கொண்டே வருகிறது.

இருந்தாலும் இப்பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் நீண்ட தூரம் பயணித்து மன்னாருக்கு வருகின்றன. இப்பறவைகளை பார்ப்பதற்கு, புகைப்படங்கள் எடுப்பதற்கும் என உள்ளூர் சுற்றுலா பயணிகள் மாத்திரம் இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தொடர்ச்சியாக வருகை தருகின்றனர்,