
ஈஸ்டர் தாக்குதலில் பலியான சகலரையும் புனிதர்களாக திருச்சபை பிரகடனம்
-கொழும்பு-
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பலியான சகலரையும் கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்களாகப் பிரகடனம் செய்யவிருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அறிவித்திருக்கிறார்.
கொழும்புக்கு வெளியே கந்தானையில் உள்ள சென். செபஸ்தியன்ஸ் தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையில் உரையாறாறிய கார்டினல் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற நான்காவது வருடாந்தத்தின்போது எதிர்வரும் ஏப்ரில் 21 இது தொடர்பிலான முதலாவது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தாக்குதல்களில் பலியானவர்கள் தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்காகவே உயிர்களைத் தியாகம் செய்தனர் என்றும் கூறினார்.
“அன்றைய தினம் அவர்கள் தேவாலயங்களுக்கு சென்றது கிறிஸ்துவின் மீதிருந்த நம்பிக்கை காரணமாகவே. ஏனைய புனிதர்களைப் போன்று கிறிஸ்துவை நேசித்த காரணத்தனாலேயே அவர்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தார்கள். ஒருவர் உயிர்த்தியாகத்தைச் செய்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்த பின்னர் மாத்திரமே அவரை புனிதராகப் பிரகடனம் செய்யமுடியும்.
“அதனால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாகப் பிரகடனம் செய்வதை நோக்கிய செயற்பாடுகளை எதிர்வரும் ஏப்ரில் 21 ஆரம்பிக்கப்படும்.
“தேவாலயங்களில் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவது மாத்திரம் கிறிஸ்துவம் அல்ல. நாம் நீதிக்காகவும் நிற்கவேண்டும்.மற்றவர்களின் நீதிக்காகவும் நாம் குரல் கொடுக்கவேண்டும். இதையே பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆயர்களுக்கு அனுப்பும் செய்திகள் மூலமாக எமக்கு போதித்திருக்கிறார் “என்று கார்டினல் ரஞ்சித் ஆராதனையில் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
