போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் இன்று மீண்டும் மேலதிக விசாரணை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மேலதிக விசாரணைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமையும் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று வியாழக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நேற்று முற்பகல் 9.20 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததுடன்,  மாலை 5.10 அளவில் அங்கிருந்து வெளியேறியிருந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் தங்கியிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ,  நேற்று முன்தினம் புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதனையடுத்து 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் நேற்று அந்த திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கடந்த மே மாதம் வழங்கிய போதனையின் போது, பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்