சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்து

 

களுத்துறை வஸ்கடுவ பகுதியில்  சுற்றுலா பயணிகள் பயணித்த பேரூந்து ஒன்று புகையிரத கடவையை கடக்கும்போது புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இவ்விபத்து இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேரூந்தே விபத்துக்குள்ளானதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த இலக்கம் 8304 பவர் செட் ரயிலே மோதியுள்ளது.

குறித்த பேரூந்தில் செக் குடியரசிற்குச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகளை ஒரு ஹோட்டலில் இருந்தும் மற்றுமொரு ஹோட்டலில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படவுள்ள விமானத்தில் சுற்றுலா பயணிகள் குழுவொன்று அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பேரூந்தின் பின்புறம் பலத்த சேதமடைந்ததுடன், புகையிரதமும் சேதமடைந்தது.

அத்துடன் புகையிரத சாரதியும் கண்ணில் சிறு காயங்களுக்கு உள்ளானதால் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் முன்வரிசை இருக்கையில் இருந்த சுற்றுலா வழிகாட்டி, இந்த புகையிரத கடவையில் ரயிலைக் காணவில்லை என்றும், ரயில் சமிக்ஞை விளக்குகள் அணைந்த நிலையில் ரயில் வந்ததாகவும், பேரூந்து நெருங்கும் போதும் விளக்குகள் எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்